சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவரால் பெரும் பரப்பரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இந்த சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர், சோதனைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலையில் படுத்துக் கொண்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இதைக்கண்ட சோதனைச் சாவடியில் உள்ள பணியில் இருந்த காவல்துறையினர் அந்த வடமாநில இளைஞனை அப்புறப்படுத்தி உள்ளனர்.அப்போது கடும் குடிபோதையில் இருந்த அந்த நபர், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தாக்க, சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசுவது போல் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு வடமாநில இளைஞர்,ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த அந்த இளைஞன் தன்னுடன் பண்ணாரி கோவிலுக்கு வந்ததாகவும் மற்றும் தாங்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவினாசி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் ரகளையில் ஈடுபட்ட அந்த வடமாநில இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த குடிபோதை ஆசாமியை காவல்துறையினர் அந்த இளைஞருடன் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பண்ணாரி சோதனை சாவடியில், ரகளை செய்த அந்த வடமாநில இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.