திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கருக்காம்பட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த போது திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டுவந்து கருக்காம்பட்டியில் இறக்கிவிட்டு மீண்டும் ஆம்புலன்ஸ் கொடைக்கானல் நோக்கி சென்றது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சகாயம் (34) என்பவர் ஓட்டிச் சென்றபோது காக்காத்தோப்பு 4 வழிச்சாலையில் இணைவதற்காக வளைவில் வாகனத்தை திருப்பினார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் சகாயம் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் சகாயத்தை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இப்போது மருத்துவமனையில் இருக்கும் சகாயத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.