மல்லூர் அருகில் பூவாயம்மன் கோவில் திருவிழாவில் நடந்த இசை நடன நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார்.
சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற பூவாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திரைப்பட இசை நடன நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகையும், பின்னணிப் பாடகியுமான ஆண்ட்ரியாவும் பங்கேற்றார். இதனால் நடிகை ஆண்ட்ரியாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் குவிந்துள்ளனர். அதன்பின் நடிகை ஆண்ட்ரியா சினிமா பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டனர்.
ஆனால் நடிகை ஆண்ட்ரியா நான் பாடல் மட்டும் தான் பாடுவேன் நடனமாட மாட்டேன் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் ஆண்ட்ரியாவை நடனமாட வேண்டும் என்று கேட்டு மேடையை சூழ்ந்து நின்று கலாட்டா செய்ததால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை அடுத்து ஆண்ட்ரியா போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்