கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் டிராவல்ஸ் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரையன்ட் நகரில் ட்ராவல்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் சிலருடன் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதன்பின் நண்பர்கள் அனைவரும் நேற்று தூத்துக்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியை கடந்து சிவந்திப்பட்டி விலக்கு மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜீவ்குமாரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜீவ்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.