Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம் வரப்போகுது…. அரசு வெளியிட்ட தகவல்……!!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று வருகிற மே 7 ஆம் தேதி ஓராண்டு முடிகிறது. இதனைக் கொண்டாடும் அடிப்படையில் சட்டசபையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆகவே அரசின் சாதனைகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவர்களை பேச வைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் அரசின் ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட  இருக்கின்றன. ஓராண்டாக சிலஅமைச்சர்களின் செயல்பாடுகள், முதலமைச்சரை கவரும் அடிப்படையில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் போன்றோரின் செயல்பாடுகளை சட்டசபையிலேயே முதல்வர் பாராட்டியுள்ளார்.

அதேசமயம் ஒருசில அமைச்சர்களின் செயல்பாடு காரணமாக முதலமைச்சர் அதிருப்தி அடைந்து உள்ளார். இதன் வெளிப்பாடாகவே போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கரன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார். அமைச்சர் பதவியிலிருந்து ராஜகண்ணப்பன் தூக்கப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் மட்டுமல்லாது உள்ளாட்சி தேர்தலிலும் அவர் பங்களிப்பு கட்சிக்காக கணக்கின்றி செலவு செய்ததை கருத்தில் வைத்து துறை மட்டும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போன்று சில அமைச்சர்கள் தங்களுக்கு பிறதுறையை ஒதுக்கிதர வேண்டுமென சொல்லி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க முதலமைச்சரின் மகனும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோஷமும் அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் எம்எல்ஏவாக பங்கேற்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனைக் காரணம் காட்டி அரசின் ஓராண்டு கொண்டாட்டத்தை ஒட்டி உதயநிதிக்கு அமைச்சராக பட்டாபிஷேகம் சூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி ஆட்சியில் உள்ளாட்சிதுறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தார். அவரிடம் ஊரக வளர்ச்சி நகர்ப்புற நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கிய உள்ளாட்சிதுறை ஒப்படைக்கப்பட்டது. அப்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதியை வழங்கி பெரியளவில் ஸ்டாலின் பிரபலமானார். அவ்வாறு பிரபலம் அடைந்தததால் தான் கருணாநிதி ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவரால் அதிமுகவை வீழ்த்தி எளிதாக முதலமைச்சராக முடிந்தது. அதே போன்று உதயநிதியை உள்ளாட்சிதுறை அமைச்சராக்க, அதிகார மட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதற்காக நேருவிடமிருந்து நகர்ப்புற நிர்வாகத்துறையும், பெரிய கருப்பனிடமிருந்து ஊரகவளர்ச்சி துறையும் பறிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவற்றிற்காகவே ஊரக வளர்ச்சிதுறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு 25 ஆயிரம் புதிய சுய உதவிகுழுக்கள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு சுழல் நிதியாக 30 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று 15 ஆயிரம் சுயஉதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 225 கோடி ரூபாய் வழங்கப்படும். வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ் சுயஉதவி குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சரானதும் அவரை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் அனுப்பி வைத்து மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி, லோக்சபா தேர்தல் பணிகளை திமுக தலைமை தொடங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் 2 மூத்த அமைச்சர்கள் மட்டுமல்லாது, கூடுதலாக ஓரிரு அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |