வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் வைத்து மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எம். காலியமூர்த்தி, இணைச்செயலாளர் சரவணமுத்து, முன்னாள் பொது செயலாளர் சிங்கார வேலு, பகுதி செயலாளர் பூமிநாதன், சங்க பொது செயலாளர் தாமஸ் பிராங்கோ, சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஓய்வூதியர் சங்க பொது செயலாளர் தாமஸ் பிராங்கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த 6 ஆண்டுகளில் 5.46 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனாக பணக்காரர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெரும் பணக்காரர்களுக்கு வராக்கடன் தள்ளுபடி செய்யாமல் அதனை வசூலிக்க மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம்மாக்குவதால் வாடிக்கையாளர்கள் கல்வி கடன், விவசாய கடன் உள்ளிட்ட எந்த ஒரு கடனும் வங்கியிலிருந்து பெறமுடியாமல் பெரிதும் பாதிப்படைவார்கள். இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படும். எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்ககூடாது. மேலும் 36 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கபடாமல் அதே நிலையில்தான் இருக்கிறது. அதிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பேர் இறந்துவிட்டனர்.
இதனையடுத்து மத்திய அரசில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் சம்பளம் உயர்த்தப்படும் போது ஓய்வூதியமும் உயர்த்தப்படுகிறது. ஆனால் இதுவரை வங்கி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. எனவே வங்கி ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி 100% வழங்க வேண்டு எனவும், ஓய்வூதியர்களின் மருத்துவ செலவில் ஒரு பகுதியை வங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் வங்கி ஊழியர் சங்க அதிகாரிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.