குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தோறும் முகாம் நடத்தப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகாமில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளிகள், பழங்குடியினர்கள், நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் குடும்ப அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது வட்ட வழங்கல் அலுவலர்கள் அன்றே நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.