Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. “1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”… பின் தொடர்ந்து வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

கேரளாவுக்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் வந்துள்ளது.

இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் ஆனைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செம்மனாம்பதி வாகன சோதனை சாவடி அருகே மாந்தோட்டத்திற்கு வாலிபர் ஒருவர் தனது பைக்கில் சாக்கு மூட்டைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தார். அதைப்பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கண்காணித்து பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது அந்த மாந்தோட்டத்தில் நிறைய சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உடனே காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஆனைமலையில் வசித்துவந்த பிரதீப் குமார் (25) என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு டன், 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |