7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாமியார் கொலை வழக்கை காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் தனபால் லே -அவுட் ஒரு பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தவர் மணி சாமியார் (45). இவர் திருமணம் ஆகாத கன்னி சாமியார். இவர் கச்சிதமான காவி உடையுடன், கழுத்தில் 25 பவுன் நகையுடன், மந்திரப் புன்னகையுடன் தன்னை தேடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் சாமியார். இவருடைய அருள்வாக்கு சிலருக்குப் பலித்துள்ளது. இதனால் இவரை தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவரது அருளைத் கேட்க தினசரி வாசலில் அதிகமானோர் காத்துக் கிடப்பார்கள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நபர்கள் வந்து அருள்வாக்கு கேட்டு செல்வார்கள். இந்நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் டிசம்பர் 12ம் தேதி காலை 7 மணி அளவில் குறி கேட்பதற்காக நிறைய பேர் அவர் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்தார்கள்.
அப்போது மாரியம்மன் கோவிலுக்கு பூ போடும் தொழிலாளி அங்கு வரும்போது சாமியாரின் வீட்டு வெளிப்புற கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். வீட்டின் கதவு சாவியால் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த பூ தொழிலாளி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது சாமியார் மணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூ தொழிலாளி கத்தி சத்தம் போட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு வெளியே குறி கேட்க இருந்த பக்தர்கள் அனைவரும் ஓடிவந்து சாமியார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது சாமியாரின் கழுத்து அறுக்கப்பட்டு அவர் கழுத்தில் கிடந்த 25 பவுன் நகை மற்றும் ஒரு டி.வி திருடு போனது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது மணி சாமியாருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. அதற்கு ஆசைப்பட்டு கொலை செய்தார்களா? அல்லது பெண் விவகாரமா? என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் சில தடயங்கள் கிடைத்தாலும் அந்த தடயத்தை வைத்து குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. எந்த ஒரு கொலை நடந்தாலும் அந்த இடத்தில் குற்றவாளி ஒரு சிறு தடயத்தை விட்டு செல்வான்.
அதை வைத்து சில கொலைகளில் துப்பு கிடைத்துவிடும். ஆனால் இதில் சற்று பின்னடைவாக இருக்கிறது. சாமியாரின் கொலை வழக்கில் 7 வருடங்கள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்தக் கொலை நடைபெற்ற போது கோவை மாநகர போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பணியாற்றினார். அப்போது துணை கமிஷனராக பதவி வைத்த நிஷா பார்த்திபன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த வீட்டுக்கு வந்தவர்கள், சாமியார் உறவினர்கள் 200க்கும் அதிகமானவர்களை பல மாதங்களாக விசாரணை மேற்கொண்டு எந்த துப்பும் கிடைக்கவில்லை.
ஏழு வருடங்கள் ஆகியும் இந்த வழக்கு துப்பு தொடங்குவதால் காவல்துறையினர் இந்த வழக்கை துப்பு துலங்காத வழக்கு என்று கிடப்பில் போட்டு விட்டனரா என்ற கேள்வி வந்துள்ளது. தற்போது போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வரும் பிரதீப் குமாரிடம் இந்த வழக்கு குறித்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, சாமியார் கொலை வழக்கில் துப்பு துலக்க மீண்டும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இதே போன்று துப்பு துலங்காத வழக்குகள் கோவையில் உள்ளதா? என்று பார்த்து நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார். மணி சாமியார் கொலை வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் குற்றவாளிகள் பிடிபடுவாரா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.