நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். நுழைவு தேர்வுக்கு எதிராக நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக மற்றும் வெளிநடப்பு செய்தது. முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து கூறியதாவது: “மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் இளைஞர்களை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
12 மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது கிடையாது. தமிழகத்தில் 70% சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர். அவர்கள் விளிம்பு நிலையை சேர்ந்தவர்கள். இந்த பொது நுழைவுத் தேர்வு முறை பலருக்கும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறையும். மாணவர்கள் பயிற்சி மையங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே மத்திய அரசு நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்” என்று அவர் கூறினார்.