Categories
உலக செய்திகள்

இலங்கை: பிரதமரை நீக்க வேண்டும்…. வலியுறுத்திய எம்.பி.க்கள்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டில் அதிபா் அலுவலத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபா் கோத்தபயராஜபட்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பின்னடைவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பட்டியலையும் அந்நாட்டு அதிபரிடம் எம்பிக்கள் சமா்ப்பித்துள்ளனா். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மகிந்த ராஜபட்ச அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கியது.

இதையடுத்து  ஆளும்கட்சியைச் சோ்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தனா். அதன்பின் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ளும் அடிப்படையில் புதிய அமைச்சரவையை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால் அதையும் கட்சிகள் ஏற்கவில்லை. ஆளும்கட்சியைச் சோ்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உட்பட 42 எம்பிக்கள் தனித்து செயல்பட முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதனிடையே கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

அரசின் தவறான பொருளாதாரக்கொள்கையே நாட்டின் இந்நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டி அந்நாட்டு மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ராஜபட்ச அரசு பதவிவிலக வலியுறுத்தி பெரும்பாலான இளைஞா்கள் அதிபா் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தொடா் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா். இப்போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அழைப்பை ஏற்று எம்பிக்கள் குழு அவரை நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது மக்கள் போராட்டத்தைத் தணிக்க பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கி விட்டு புதிய அமைச்சரவையை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும், பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அதிபரிடம் சமா்ப்பித்ததாகவும் எம்பிக்கள் தெரிவித்தனா். அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர இருப்பதாக பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகயா சென்ற வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இத்தீா்மானத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டணி செய்தித் தொடா்பாளா் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தாா்.

Categories

Tech |