Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கம்பத்தைச் சேர்ந்த அஹமது ரபீக், ராஜேந்திரன் என்பவர்களிடம் மது வாங்கித் தருமாறு கேரள இளைஞர்கள் கேட்டுள்ளனர். இதற்கு, இருவரும் மதுபானம் வாங்கித் தருவதாகக் கூறி, கேரள இளைஞர்களை கம்பம்மெட்டு சாலை வழி வரை கூட்டிச்சென்றுள்ளனர். அப்போது, அஹமது ரபீக் செல்போன் மூலம் மேலும், நான்கு நண்பர்களை வரவழைத்து அரிவாளை காட்டி மிரட்டி, கேரள இளைஞர்களிடம் 4 செல்போன் மற்றும் 4000 ரூபாய் என வழிப்பறி செய்து தப்பியோடினர்.

செல்போன் மற்றும் பணத்தை இழந்த கேரள இளைஞர்கள், கம்பம்மெட்டு சாலையில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், கம்பம் வடக்கு ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் தனிக் குழுக்களாகப் பிரிந்து வழிப்பறி செய்தவர்களை கம்பம் நகர் முழுவதும் தீவிரமாகத் தேடினர்.

இந்நிலையில், கம்பம் மெட்டு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு பேரில், நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் திருடிய 4 செல்போன்கள் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழிப்பறி நடந்து ஆறு மணி நேரத்திற்குள்ளாக விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பொதுமக்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |