மெரினாவில் தூங்கிக்கொண்டிருந்த நபரை 2 மர்ம நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணியில் வசித்து வரும் பச்சையப்பன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அவர் வேலைக்குச் செல்லாமல் மெரினாவில் உள்ள நடைபாதையில் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் பச்சையப்பனை தாக்கி தரையில் தரதரவென இழுத்துச் சென்று கொலை வெறியுடன் அவரின் தலையை தரையை மோத செய்து காலால் மிதித்து உள்ளனர். பச்சையப்பன் அலறிய நிலையில் அங்கு வந்த பெண் ஒருவர் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.
அங்கிருந்த பொதுமக்கள் பச்சையப்பனை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த பச்சையப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து மெரினா இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து அந்த மர்மநபர்கள் 2 பேரை தேடி வருகிறார்கள். அந்த இரண்டு நபர்கள் பிடிபட்டால் தான் பச்சையப்பன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். மேலும் பச்சையப்பனின் மனைவி இறந்து விட்டதாகவும் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் போலீசார் கூறியிருக்கின்றனர்.