தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவிலங்குகளின் நலனுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது நெகிழி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 105 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகன ஓட்டுனருக்கு ரூபாய் 75,000 அபராதம் விதித்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் அபராதத்துடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.