வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கே வி குப்பம் மேல்மாயில் பகுதியில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காளை விடும் விழா நடைபெறும். இந்த விழாவில் பல இளைஞர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இவ்வாண்டும் மயிலார் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெறும் காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும் இரண்டாம் பரிசாக 80 ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக 40 ஆயிரமும் வழங்கப்பட்டது. போட்டியில் பார்வையாளர்கள் கண்டுகளிக்க இருபுறமும் கம்பு கட்டைகள் கட்டி தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் பார்வையாளர்கள் மாடுகளைத் தொட எண்ணி தடுப்பினை மீறி களத்திற்குள் வந்ததால் மாடுகளால் தாக்கப்பட்டனர்.
அந்த வகையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து குடியாத்தம் அருகே உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிவசக்தி என்ற நபர் தீவிர காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவசக்தி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.