கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார் நடிகர் ராமராஜன். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் 2016 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய போரி ராமராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,புகார் கொடுத்தபோது ஊழியர்களிடமிருந்து எந்த ஆதாரங்களும் கேட்காமல் வழக்கை விசாரணைக்கு ஏற்ற குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய அனுமதி திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும், தென்னிலை நாலு ரோடு சந்திப்பு தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை கணிக்க தவறிவிட்டார் என்றும் ராமராஜன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராமராஜன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.