வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் சதாசிவம்-பிரேமாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சதாசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.