இந்தியா-அமெரிக்கா இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உடன் இருந்துள்ளனர்.
இதனையடுத்து இரு நாட்டு வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா – அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், ராஜாங்க ரீதியிலான உறவை மேம்படுத்துவது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது, ரஷியாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நீங்கள் இந்தியா ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது குறித்து பார்த்தீர்களானால் உங்கள் கவனம் ஐரோப்பாவில் இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்குகிறேன்.
எங்கள் எரிபொருள் பாதுகாப்பிற்காக ரஷியாவிடமிருந்து நாங்கள் எரிபொருள் வாங்குகிறோம். அந்த கணக்கீட்டை பார்த்தோமானால் ரஷியாவிடமிருந்து ஐரோப்பா ஒரு நாள் மதியம் வாங்கும் எரிபொருளை விட ரஷியாவிடமிருந்து இந்தியா ஒரு மாதம் வாங்கும் மொத்த எரிபொருள் அளவு குறைவு’ என்றார்.