வேலூர் அருகில் ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள நாச்சிமேடு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி பிரகாஷ். இவருடைய மனைவி 23 வயதுடைய சந்தூரா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சந்திராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேதாஜி அங்கு விரைந்து சென்று அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மூலனூர் என்ற பகுதி அருகில் செல்லும் போது சந்திராவுக்கு பிரசவ வலி அதிகமாக இருந்தது. உடனே ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் செல்வி, சந்திராவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். சந்திராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளார்கள்.