சத்துவாச்சாரியில் மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மனுவாக கொடுத்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் மந்தைவெளியில் இருந்து பால் ஆற்றுக்கு செல்லும் பாதையில் புதிதாக மதுபானக்கடை கடந்த சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் இந்த கடை மூடப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் இந்த மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேசமயம் அந்த கடையை திறக்க கோரி மது பிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் உள்ள மதுபான கடையை திறப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அந்தக் கடை மூடாமல் மீண்டும் அதே இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் காட்பாடிக்கு சென்று வருவதால் இடையூறு ஏற்படுகிறது. இதனால் மதுபான கடையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.