அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று முன்தினம் காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதில் மருத்துவமனை வளாகம், மருந்து வழங்கப்படும் இடம், உள் நோயாளி பிரிவுகள், வெளிநோயாளிகள் பிரிவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
மேலும் சிகிச்சை பெற வருபவர்களுக்கு தடையில்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்கு போதுமான அளவு மருந்துகள் இருப்பில் உள்ளதா என்றும், மருத்துவ பரிசோதனை கூடம் சரியாக செயல்படுகிறதா என்றும் மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து கலெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் சிகிச்சை பெற வருபவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடன் சிகிச்சை பெற்று செல்லவேண்டும் என்பது தான்.
அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருவோரின் ஒவ்வொரு மனதிலும் இது நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற நிலையே உருவாக்குவதே மருத்துவர்களின் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகர மன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சுதாகர், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் உடன் இருந்தார்கள்.