திண்டிவனம் நகர அமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி(46). இவர் திண்டிவனம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 9 ஆம் தேதி அன்று ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் உங்களுடைய பான் கார்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் அப்படி புதுப்பிக்கவில்லை எனில் உங்களுடைய வங்கி கணக்கு எண் முடக்கப்படும் என்றும் அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த மெசேஜில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
உடனே இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தி அந்த லிங்கிற்கு சென்று தன்னுடைய பெயர், பான் கார்டு எண், பாஸ்வேர்ட் அனைத்தையும் பதிவு செய்த போது ஒரு ஓடிபி எண் வந்தது அதையும் பதிவு செய்துள்ளார். இதை அடுத்து சில மணி நேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தியின் திண்டிவனம் கிளையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கில் இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ 80 ஆயிரத்து 898 எடுத்ததாக மெசேஜ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.