தொடர்ந்து 48-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்சன், கார்கீவ், மரியபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன.
இதற்கிடையே உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே புச்சா நகரில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் சாலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது கொன்று புதைக்கப்பட்ட சுமார் 1200-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் தலைநகர் கீவிற்கு அருகில் உள்ள நகரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய படைகள் சடலங்களை ஒரே இடத்தில் மிகப் பெரிய பள்ளத்தை தோண்டி அதில் புதைத்துள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.