பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜலதா தேவகுமாரியின் கணவனும், மகனும் இறந்து விட்டனர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரியின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 83 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,26,000 ரூபாய் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக நேசமணி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இவர்கள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து துப்பு துலக்கி வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பெண் மருத்துவரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர், பெண் மருத்துவரின் வீட்டில் 83 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஜாய் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருடைய உருவம் சிசிடிவி கேமராவில் தெளிவாக இருந்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஜாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 20 திருட்டு வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவரிடமிருந்து பல்வேறு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் 226 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2019-ஆம் ஆண்டு முதல் கேரள காவல்நிலையத்திலும் ஜாயின் மீது 20 திருட்டு வழக்குகள் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதைப்பொருள் ஒழிப்புகளை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக 10 வருடங்களுக்கு முன்பு கஞ்சா வியாபாரம் செய்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஒவ்வொரு காவல்நிலையத்தில் இருந்தும் 8 காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.