உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர்கேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லியா துணை மின்நிலையத்தில் லைன்மேனாக கோகுல் (42) பணிபுரிந்து வந்தார். அண்மையில் இவர் அலிகஞ்சு பகுதிக்கு மாற்றப்பட்டார். இதனால் மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தன் மேல் அதிகாரியான இளநிலை என்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ரூபாய் 1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கோகுலிடம் நாகேந்திர சர்மா கேட்டார். மேலும் கோகுலின் மனைவியை ஒருநாள் இரவு முழுவதும் தன் வீட்டுக்கு அனுப்புமாறும் கீழ்த்தரமாக கேட்டுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த கோகுல் பல்லியாவிலுள்ள நாகேந்திர சர்மாவின் வீட்டின் முன்பு சென்ற 9ஆம் தேதி தீக்குளித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவர் ஏற்கனவே வெளியிட்ட வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட கலெக்டர், மின்வாரிய ஊழியர் கொலைக்கு காரணமான அதிகாரி நாகேந்திர சர்மாவையும், மற்றொரு லைன்மேனான ஜகத்பால் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.