கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற சில மாதங்களுக்கு முன் மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் விவகாரத்தில் 40 % கமிஷன் கேட்கிறார் என பரபரப்பு பேட்டியளித்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது மந்திரி ஈஸ்வரப்பாவின் தொல்லையால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் உடுப்பியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தன் நண்பர்கள் இருவருடன் தங்கியிருந்தார். இதையடுத்து இன்று காலை சந்தோஷ் விடுதியின் அறையில் தூக்கில் சடலமாக தொங்கினார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தோசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் சந்தோஷ் தான் கைப்பட எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் என் சாவுக்கு மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் முழுகாரணம் என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு மந்திரி ஈஸ்வரப்பா மீது புகார் கூறிய சந்தோஷ் திடீரென்று இறந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.