இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்று கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது. 2வது தேசிய கல்வி கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையில் இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி திணிப்பை தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம். கடந்த 2010ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது சி.யு.சி.ஈ.டி(CUCET) தேர்வு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் – திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வை, திமுக அரசு எப்படி குறை சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.