வட மாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் ரவிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் வெள்ளியங்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தில் ஆகியோர் இருவரையும் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய 2 பேரும் செல்போனில் ரவிசெல்வத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் ரவிசெல்வம் சரவணன், செந்தில் ஆகியோரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது சரவணன், செந்தில் ஆகியோர் 3 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரவி செல்வம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன் மற்றும் செந்தில் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.