திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் நேற்று நகரமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்க துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகிக்க நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வரவேற்றார். நகர்மன்ற கூட்டமானது தொடங்கியவுடன் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள்.
அப்போது அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் பாமக கவுன்சிலர் ஹேமாமாலினியும் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதால் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே வந்து சொத்து வரியை திரும்பப் பெறக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள். வெளிநடப்பு செய்த அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி வருகின்ற நிலையில் இந்த புதிய வரி சுமையில் மக்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் இதை திரும்ப பெற வேண்டும் எனக் கூறினார்கள். இந்தக் கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.