சென்னை மாநகராட்சி, வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் உள்ள இ சேவை மையங்கள் அல்லது இணைய தளம் வாயிலாக செலுத்தி வருகின்றனர்.
மேலும் அதைபோல் நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு ஆகிய வசதிகள் மூலமாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் வரி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழுவானது, பரிந்துரை செய்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி பொறுத்தவரை, சீராய்வுக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் புதிய சொத்து வரி வீதம் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட இருக்கிறது.
ஆகவே இந்த 2022-23ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே வருகிற 15ஆம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு, வருகிற 15ம் தேதிக்குள், 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும், தவறும் நபர்களுக்கு 2% அபராத தொகையுடன் சொத்து வரியானது வசூல் செய்யப்படும்.
இந்நிலையில் மறுசீராய்விற்கு பிறகே, சொத்து வரி கட்டணம் மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், முறையாக அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து, சொத்து உரிமையாளர்கள் தங்களது, 2022-23-ம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதம் உள்ள சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மாநகராட்சிக்கு இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் சொத்து வரியை செலுத்தும்போது ஏதேனும் குறைபாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்திட வேண்டும். மேலும் அதன் அடிப்படையில், தீர்வு செய்ய தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.