Categories
தேசிய செய்திகள்

‘பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சாமல் முடிவெடுத்த ராஜ்நாத்’ – காங்கிரஸ் வாழ்த்து!

டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களைத் தயார் செய்வதற்காக அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து சமர்ப்பித்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்த நிலையில், அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

‘திட்டம் 75I’ (Project 75I) என்பது ஆறு டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களை 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இதனை அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து தயாரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், சில தொழில்நுட்பக் காரணிகளால் தயாரிக்க இயலாது என்று ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நிராகரித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில், “இந்த ஒப்பந்தத்தை அதானி – எச்.எஸ்.எல். குழுமத்திற்கு அளிக்கக் கூடாது என எங்கள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை இக்குழுமத்திற்கே அளிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் சார்பில் அழுத்தம் தரப்பட்டது. இருந்தபோதிலும், அழுத்தத்திற்கு அடிபணியாமல் திட்டத்தை அதானி – எச்.எஸ்.எல். குழுமத்திற்கு வழங்காத ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம். காங்கிரஸ் கட்சி எழுப்பிய சரியான கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விடை அளித்துள்ளது” என்றார்.

லார்சன் அன்ட் டூப்ரோ, மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம், ரிலையன்ஸ் நேவல் & இன்ஜினியரிங் லிமிடெட், அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு விண்ணப்பத்திருந்தது.

Categories

Tech |