ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கோட்டைமேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 5 குடும்பங்களுக்கு மட்டும் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 5 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் 10 வீடுகளுக்கும் மின் இணைப்பும் இதுவரை வழங்கவில்லை. இவர்களுடைய வீடுகள் மிகவும் பழுதடைந்து இருப்பதால் மழை நேரங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இதன் காரணமாக மழை நேரங்களில் புது வீடுகளில் வசிப்பவர்களுடன் சேர்ந்து தங்குகின்றனர். இதனால் ஆதிவாசி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் போதிய அளவு நிதி வசதி இல்லாததால் ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இனிவரும் நாட்களிலாவது ஆதிவாசி மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.