வேறு ஒருவரின் அடையாள அட்டையைக் காண்பித்து போலீஸ் என்று தப்பிக்க முயன்ற வேன் ஓட்டுநர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை, பெரியமேட்டில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் பைக்கில் வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது நானும் போலீஸ்காரன் தான் என்பதற்கான அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். உடனே காவல்துறையினர் அந்த அடையாள அட்டையை சரி பார்த்தபோது அது போதையில் வந்தவரின் உறவினர் ஒருவருடையது என்று தெரியவந்தது
மேலும் அடையாள அட்டையில் உள்ளவர் செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார் என்று போதையில் அந்த நபர் கூறினார். போதையில் இருந்த நபரின் பெயர் நவீன் ராஜ்(45). அவர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து பெரியமேடு காவல்துறையினர் அவர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக மட்டும் வழக்கு பதிந்து விட்டு அவரை விடுவித்து விட்டனர். ஆனால் போலீஸ் என்று ஏமாற்றியதற்கு நடவடிக்கை எடுக்காததால் இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.