ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு உடுமலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் தனியார் ஆம்புலன்சில் குழந்தை, குழந்தையின் தந்தை சிவசங்கர், உறவினர்கள் சகுந்தலா, பழனிச்சாமி, வள்ளி, தனியார் மருத்துவமனை நர்ஸ் ஆகியோர் பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ஆம்புலன்சை ரவீந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மலுமிச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ரவீந்திரன் மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த பழனிச்சாமி, சகுந்தலா, வள்ளி ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவீந்திரன் மற்றும் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,