லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியபாலக்குளி கிராமத்தில் கூலி தொழிலாளியான மஞ்சுநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை முருகேசன் என்பவரது நிலத்தில் மண்ணை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது விவசாய நிலத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மினி லாரி மேடான பகுதியில் ஏற முடியாமல் பின்னோக்கி நகர்ந்து மஞ்சுநாத் மீது மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுநாத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுநாத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.