தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வருகிறது. அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறையாக உள்ளது. இதையடுத்து 16ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் விடுமுறை விடப்படுமா? என்று மாணவர்கள் சந்தேகத்தில் இருந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர், வரும் 16ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14)ஆம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.