தமிழகத்தில் நாள்தோறும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி, அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று 14-ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறையாக உள்ளது. இதையடுத்து 16ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் விடுமுறை விடப்படுமா? என்று மாணவர்கள் சந்தேகத்தில் இருந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர், வரும் 16ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த 4 நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு, வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். எனவே அவர்களுக்கு பயனுள்ள வகையில் கிட்டத்தட்ட 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி,தமிழகமெங்கும் சிறப்பு பேருந்துகளானது, தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளன. மேலும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.
இதையடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக வரும் 17ஆம் தேதி அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.