மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து, இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று ஒமைக்ரானை விட அதிவேகமாகப் பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பற்றி அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது செயல்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். மேலும் தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார்.