பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து ஆட்சி கவிழ்ந்ததோடு, பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஷபாஸ் ஷெரீப் என்பவர் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஆபரணம் ஒன்று பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்ரான்கான் அரசு பரிசு சேமிப்பு மையத்திற்கு அந்த ஆபரணத்தை அனுப்பி வைக்காமல் தன்னுடைய சிறப்பு உதவியாளர் ஷபீகர் புஹாரியிடம் அதனை கொடுத்துள்ளார்.
இம்ரான்கானின் உதவியாளர் ஷபீகர் புஹாரி அந்த நெக்லசை லாகூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.18 கோடிக்கு விற்றுள்ளார். இந்த விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. அரசு கருவூலத்தில் பரிசாக கிடைத்த ரூ.18 கோடி மதிப்புள்ள அந்த ஆபரணத்தை ஒப்படைக்காமல் விற்றதற்காக அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.