மும்பையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக் புகார் ஒன்று எழுந்துள்ளது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்து, தற்போது அவர் மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் நவாப் மாலிக், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். இதையடுத்து அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து, நவாப் மாலிக் மும்பை கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் நவாப் மாலிக்கின் பல்வேறு சொத்துக்களை அமலாக்கத்துறையினர் நேற்று முடக்கியுள்ளனர். மேலும் நவாப் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 147 ஏக்கர் விவசாய நிலம், வணிக கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்பட பல்வேறு சொத்துக்களை அமலாக்கத்துறையினர் நேற்று முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.