பல்பொருள் அங்காடி கடையில் மின்சாரம் தாக்கி மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் சித்தணி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாகுல் அமீது (37). இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 11ஆம் தேதி இரவு கடைத்தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் உள்ள எடை பார்க்கும் எந்திரத்தின் பெத்தானை அழுத்தியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவரை தூக்கி வீசியது.
இதில் ஷாகுல் அமீது மயங்கி கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஷாகுல் அமீது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஷாகுல் அமீது சகோதரர் அமானுல்லா புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.