திருவெண்ணெய்நல்லூர் அருகில் தண்ணீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
திருவெண்ணெய்நல்லூர் அருகில் பெரியசெவலை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சாலை தெரு, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, குட்டை தெரு ஆகிய பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிதண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிதண்ணீர் வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பெரியசெவலை பேருந்து நிறுத்தத்தில் கடலூர் – சித்தூர் ரோட்டில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது அலிபெய்க், தேவராஜ் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், பெரியசெவலை ஊராட்சி மன்ற துணை தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் உடனடியாக குடிதண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என்றும், மேலும் குடிநீருக்காக கூடுதல் மின்மோட்டார் பம்புகள் வைத்து தரப்படும் என்று அவர்கள் கிராம மக்களிடம் உறுதி கொடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.