கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாநிலத் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை காட்ட உரிமை உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்துவரும் கேரளாவில் இச்சட்டத்தை எதிர்த்து முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மததுன்புறுத்தல் காரணமாக 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தபிட்சுகள், ஜெயின்கள், பார்சி மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.