விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்டம், கீழ் பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 49 வருடங்களாக செயல்பட்டு வந்த தேசிய மாணவர் படை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைளை கையில் ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, தேசிய மாணவர் படை மூலம் வருடந்தோறும் 200-க்கும் அதிகமான மாணவர்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை உட்பட பல்வேறு சீருடை பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் தற்சமயம் கல்லூரி நிர்வாகம் அவற்றை ரத்து செய்ததால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. இதனால் மீண்டும் தேசிய மாணவர் படை கொண்டு வர வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.