மாநில பேரிடா் மீட்புப்படையில் இருந்து (எஸ்டிஆா்எஃப்) வரும் நிதியை தனிநபா் வங்கிக் கணக்குக்கு ஆந்திரஅரசு மாற்றுவதற்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆந்திர மாநிலத்தை சோ்ந்த பல்ல ஸ்ரீநிவாச ராவ் என்பவா் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூபாய் 50,000 கருணைத்தொகை வழங்குவது குறித்து தன் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வரும் சூழ்நிலையில், ஆந்திர மாநில அரசு மாநில பேரிடா் மீட்புப் படையில் இருந்து வரும் நிதியிலிருந்து இந்த கருணைத் தொகையை வழங்கி வருகிறது.
இதில் மாநில பேரிடா் மீட்புப் படையில் இருந்து வரும் நிதியை தனிநபா் வங்கிக்கணக்குக்கு மாற்றுவது பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 46 (2)-க்கு எதிரானது என்பதோடு, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். ஆகவே மாநில அரசின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கெளரவ் பன்சல், “பேரிடா் மீட்புப்படை நிதியை தனிநபா் கணக்குக்கு மாநில அரசு மாற்றுவது சட்டவிரோதமானது”என்று கூறினார். இதையடுத்து மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வரியா பாட்டீ, “இவ்விவகாரம் குறித்து மாநிலங்களிடம் மத்திய அரசு கேள்வி எழுப்பி இருக்கிறது” என்று கூறினார். இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், மாநில பேரிடா் மீட்புப் படையில் இருந்து (எஸ்டிஆா்எஃப்) வரும் நிதியை தனிநபா் வங்கிக் கணக்குக்கு ஆந்திர அரசு மாற்றுவதற்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக விளக்கம் அமளிக்குமாறு ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.