பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பயாட்றிஸ் தங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களிடம் 2 மத நூல்களை ஒப்பிட்டு ஒரு மதத்தை மட்டும் உயர்வாகப் பேசியுள்ளார். இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறி அந்த மதத்தை பின்பற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரணியல் காவல்நிலையத்தில் ஆசிரியர் பயாட்றிஸ் தங்கம் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் பயாட்றிஸ் தங்கத்தை கைது செய்தனர். இந்த தகவலையறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி ஆசிரியர் பயாட்றிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஆசிரியர் மதமாற்றம் செய்ய கூறி வற்புறுத்துவதாக மாணவி ஒருவர் புகார் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.