உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வருவது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாதம் என்று போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்து உள்ளார்.
உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளிலிருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கிய சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் போர் அத்துமீறல்களை பார்வையிட்டார். இதையடுத்து நேற்று(புதன்கிழமை) பால்டிக் நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் ஜனாதிபதிகள் தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து போர் நிலவரங்களை கேட்டறிந்தனர்.
அதன்பின் செய்தியாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய போலந்துஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா, உக்ரைனில் ரஷ்யராணுவம் நடத்தியிருப்பது போர் தாக்குதல் அல்ல, தீவிரவாத வன்முறை என்று தெரிவித்து இருக்கிறார். நாங்கள் இந்த பயங்கரமான செயலை செய்த ராணுவ வீரர்களை மட்டும் பேசவில்லை, அதற்கு உத்தரவு பிறப்பித்த அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா தற்போது கிழக்கு பகுதியில் தீவிரமான தாக்குதலுக்கு தயாராகி வருவதால் உக்ரைனுக்கு தேவையான கூடுதல் ராணுவ உதவிகளை செய்வது குறித்து சர்வதேச அளவில் அழுத்தம் தர திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய லாட்வியன் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ், உக்ரைனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் உதவுவது எங்களது கடமை என்று தெரிவித்துள்ளார். பின் எஸ்தோனிய அதிபர் அலார் காரிஸ் பேசியபோது, புடின் இப்போரில் தோல்வியடைய வேண்டும் இல்லையெனில் ஐரோப்பாவில் அமைதி இருக்காது என்று தெரிவித்தார். ரஷ்யா போர் குற்றங்களை புரிந்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டிவரும் சூழ்நிலையில் அதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அத்துடன் இத்தகைய குற்றசாட்டுகள் உக்ரைன் மேற்கு நாடுகளுடன் இணைந்து போலியான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்துள்ளது.