அமெரிக்க விமானத்தில் நடுவானில் கதவை திறக்க முயன்ற பெண் பயணிக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டல்லாஸ் நகரில் இருந்து சார்லட் நோக்கி விமானம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி பறந்து சென்றுள்ளது. நடுவானில் மிக உயரத்திற்கு விமானம் சென்றபோது, பெண் பயணி ஒருவர் எழுந்து சென்றிருக்கிறார். இதில், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் அவர் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தூக்கி விட விமான ஊழியர் ஒருவர் உதவி செய்ய முன்வந்தார். ஆனால், அந்த பெண் பயணி அவரை மிரட்டியதுடன் நில்லாமல், மற்றொரு ஊழியரை கடித்தும் வைத்துள்ளார்.
விமான ஊழியர்களின் மீது எச்சில் துப்பியும், தலையில் தாக்கியும், கடித்து வைத்தும், காலால் உதைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதன்பின், விமானத்தின் முன்பக்க கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக, விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் விமானிகளின் பாதுகாப்பிற்காக அவரை விமானத்தில் இருந்த ஊழியர்கள் பிடித்து, அவரது இருக்கையிலேயே கட்டி வைத்துள்ளனர். அவருடைய வாயையும் டேப் கொண்டு மூடியுள்ளனர். சார்லட் நகரில் விமானம் தரையிறங்கிய உடன் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் முழுவதும் மற்றொரு பயணியால் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவர், அதனை டிக்-டாக்கில் வெளியிட்டிருக்கிறார். பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதற்காக, அவரை கடந்து செல்லும்போது அவர்களை நோக்கி கத்தி, சத்தம் போட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், விரிவான விசாரணைக்கு பின்னர், அவருக்கு மிக அதிக அளவிலான அபராத தொகை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, இந்திய மதிப்பில் ரூ.62.37 லட்சம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா விமான போக்குவரத்து துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக பெரிய அபராதமாகும்.