ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளுக்கான பட்டியலில் நான்காம் இடத்தில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆசியாவிலேயே சக்திவாய்ந்த நாடுகளின் கடந்த வருடத்திற்கான பட்டியலை சிட்னியின் லோவி நிறுவனமானது வெளியிட்டிருக்கிறது. அதாவது உலகில் இருக்கும் முக்கிய நாடுகளின் ராணுவ திறன், உள்நாட்டு நிலை, வருங்கால திட்டமிடல், பொருளாதார திறன், மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், அரசியல் மற்றும் ராஜதந்திர செல்வாக்கு, கலாச்சார செல்வாக்கு பாதுகாப்பு வலை அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி கடந்த வருடத்திற்கான பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்திருக்கிறது. அதைதொடர்ந்து முறையே சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இந்தியா நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. எனினும், இந்தியா கடந்த 2020 ஆம் வருடத்தை விட இந்த வருடத்திற்கான பட்டியலில் 2 புள்ளிகள் இழப்பை சந்தித்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு தற்போது நடுத்தர சக்தி பட்டியலுக்கு மாறியிருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் எல்லா நாடுகளை விடவும் கொரோனா தொற்றால் இந்தியா வளர்ச்சிக்கான திறனை அதிகம் இழந்திருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.