ஒட்டகங்களை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொல்லப்படுவதாக கடந்த 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது ராஜஸ்தானிலிருந்து ஓட்டகங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொல்லப்படுவதாக குற்றம் எழுந்தது. இந்த வழக்கு நீதிபதி முனீஸ்காந்த் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டு கொல்லப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் சட்ட விரோதமாக ஒட்டகங்கள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒட்டகங்களும் கொல்லப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், ஒட்டகங்களை கொல்பவர்கள் மீது மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.